குறள் (Kural) - 457

குறள் (Kural) 457
குறள் #457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

பொருள்
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.

Tamil Transliteration
Mananalam Mannuyirk Kaakkam Inanalam
Ellaap Pukazhum Tharum.

மு.வரதராசனார்

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

கலைஞர்

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.

பரிமேலழகர்

மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும். ('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் -மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இன நன்மை எல்லா வகையிலும் புகழை உண்டாக்கும். மன் என்னும் சொல் மன்பதை என்பதிற்போல் மாந்தனைக் குறித்தது. இச்சொல்லின் வரலாறு முன்னரே கூறப்பட்டது. "மனத்துக்கண் மாசிலனாத லனைத்தறன்" (குறள். 34) என்றும், "அறத்தினூஉங் காக்கமுமில்லை" (குறள். 22) என்றும் முன்னரே கூறியிருத்தலால், "மனநலமன்னுயிர்க் காக்கம்" என்றும், இனநலமுடையார்க்குப் புகழ்க்கேதுவான செயலெல்லாம் வெற்றியாய் முடிதலின் ' எல்லாப் புகழுந்தரும்' என்றும் ; கூறினார். இதனாலும் இருவகைத் தூய்மையின் பயன்களும் கூறப்பட்டன.

மணக்குடவர்

மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.

புலியூர்க் கேசிகன்

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai)