குறள் (Kural) - 458

குறள் (Kural) 458
குறள் #458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

பொருள்
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

Tamil Transliteration
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu.

மு.வரதராசனார்

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

சாலமன் பாப்பையா

மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

கலைஞர்

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

பரிமேலழகர்

மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து ('நான்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.

ஞா.தேவநேயப் பாவாணர்

மனநலம் நன்கு உடையராயினும் -மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அறிவு நிறைந்தோர்க்கு இனநன்மை அரணாகுந் தன்மையுடையது. மனநலம் பிறப்பிலேயே அமையினும் அது முன்னோரிடமிருந்து பெற்ற மரபுரிமையாயிருக்கலா மாதலால், அதுவும் ஒருவகையில் இனநலத்தால் அமைவதே. இயற்கையான மனநலத்தையும் இனநலம் வளர்த்து உறுதிப்படுத்துவதால், அதற்கு 'ஏமாப்புடைத்து' என்றார். உம்மை இயற்கை மனநலத்தின் அருமையை உணர்த்திற்று. இது மறுதலைக் கொள்கையை ஒருமருங்கு தழுவியதாகும். 'நன்கு' என்பதற்கு 'நல்வினையால்' என்று பொருள்கொண்டார் பரிமேலழகர். அது பொருந்துமேனும் அதுவே திட்டமான ஆசிரியர் கருத்தென்பதற்குக் குறளில் ஒரு குறிப்புமில்லை. அதுவே அவர் கருத்தாயின், மனநல நல்வினைப்பேறாயினும் என்றோ, மனநல மூழான் மருவினும் என்றோ யாத்திருப்பர். எனினும் மரபுரிமைப் பேறாகவோ நல்வினைப் பேறாகவோ திருவருட்பேறாகவோ அவர் கொண்டிருக்கலாமென்று கருத இடமுண்டு.

மணக்குடவர்

மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

புலியூர்க் கேசிகன்

சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai)