குறள் (Kural) - 456

குறள் (Kural) 456
குறள் #456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

பொருள்
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

Tamil Transliteration
Manandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku
Illainan Raakaa Vinai.

மு.வரதராசனார்

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

கலைஞர்

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

பரிமேலழகர்

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் -தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - தூய இனத்தையுடையார்க்கு எல்லா வினையும் கைகூடும். பெற்றோரைப்போற் பிள்ளைகளிருப்பதே பெரும் பான்மையாதலால் ' எச்ச நன்றாகும்' என்றும், நல்லினத்தோடெண்ணிச் செய்யும் வினை நன்றாய் முடியுமாதலால் 'இல்லை நன்றாகா வினை ' என்றும் கூறினார். இங்கு 'எச்சம்' என்பதற்குப் புகழ் என்றும் உரைகொள்வர், அடுத்த குறள் "இனநலம் எல்லாப் புகழுந் தரும்" என்று கூறுவதால், அவ்வுரை பொருந்துவதன்றாம்.

மணக்குடவர்

மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை. இது மேலதற்குப் பயன் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும்; சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai)