குறள் (Kural) - 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பொருள்
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
Tamil Transliteration
Pallaar Pakai Kolalir Paththatuththa Theemaiththe
Nallaar Thotarkai Vital.
மு.வரதராசனார்
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
கலைஞர்
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
பரிமேலழகர்
பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல். (பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நல்லார் தொடர் கைவிடல் -அரசன் நற்குணச் செல்வரான பெரியாரொடு நட்பை விட்டு விடுதல்; பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே -தான் ஒருவனாகநின்று பலரொடு பகை கொள்வதினும் பதின்மடங்கு தீமை விளைப்பதே. ஒருவன் பகைவர் பலராயினும், அவரைப் பிரித்தல், ஒருவரோடொருவரை மோதுவித்தல், சிலரைத் தனக்கு நட்பாக்கல் முதலிய வலக்காரங்களைக் கையாண்டு கேட்டிற்குத் தப்புதல்கூடும் . ஆயின், நல்லார் தொடர்பை விடுபவரோ ஒருவகையாலும் தப்ப வழியின்மையின். இது அதனினும் மிகத்தீது என்பதாம், ஏகாரம் தேற்றம்..
மணக்குடவர்
பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.
புலியூர்க் கேசிகன்
பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) |