குறள் (Kural) - 449

குறள் (Kural) 449
குறள் #449
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

பொருள்
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

Tamil Transliteration
Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch
Aarpilaark Killai Nilai.

மு.வரதராசனார்

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

கலைஞர்

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

பரிமேலழகர்

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை. (முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை -முதற்பொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியமும் (இலாபமும்) இல்லை; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அது போல, தம்மொடு சேர்ந்து தம்அரசை, முட்டுக்கொடுத்துத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் ஏற்படும் நிலைபேறும் இல்லை. ஊதியப்பேற்றிற்கு முதலீடு போல அரசு நிலைபேற்றிற்கு அமைச்சுத்துணை இன்றியமையாததென்பதாம். இதில் வந்துள்ளது எடுத்துக் காட்டுவமை யணி.பொருளாக வந்த தொடர் ஒருமருங் குருவகம். ஆகவே, இணையணியாம்.

மணக்குடவர்

முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

புலியூர்க் கேசிகன்

முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal)