குறள் (Kural) - 451

குறள் (Kural) 451
குறள் #451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பொருள்
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.

Tamil Transliteration
451 Sitrinam Anjum Perumai Sirumaidhaan
Sutramaach Choozhndhu Vitum.

மு.வரதராசனார்

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

கலைஞர்

பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.

பரிமேலழகர்

பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். '(தத்தம் அறிவு திரியுமாறும் , அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெருமை சிற்றினம் அஞ்சும் -பெரியார் சிறியோர் கூட்டத்திற்கு அஞ்சுவர்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - சிறியோரோ அக்கூட்டத்தைக் கண்டவுடன் அதைத் தமக்குச் சுற்றமாக எண்ணித் தழுவிக்கொள்வர். சிறியோர் சேர்க்கையால் தம் அறிவும் ஒழுக்கமும் கெடுவதும் அதனால் இருமையுந் துன்பம் நேர்வதும் நோக்கி, பெரியோர் அதனின்று விலகித்தம்மை முற்படக் காத்துக்கொள்வர். அஞ்சுதல் அஞ்சிவிலகுதல் "இனத்தை இனம் தழுவும்" "இனம் இனத்தோடே" ஆதலால் சிறியோரொடு சிறியோர் சேர்ந்து கொள்வர்.பண்பியின் தொழில் பண்பின்மேல் ஏற்றப்பட்டது.சுற்றியிருப்பது சுற்றம் சூழ்தல் அச்சுற்றத்திற்கு இனமாக வளைதல்.

மணக்குடவர்

சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர். இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.

புலியூர்க் கேசிகன்

பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai)