குறள் (Kural) - 448

குறள் (Kural) 448
குறள் #448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

பொருள்
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

Tamil Transliteration
Itippaarai Illaadha Emaraa Mannan
Ketuppaa Rilaanung Ketum.

மு.வரதராசனார்

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

கலைஞர்

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

பரிமேலழகர்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும்- தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான். 'இல்லாத ஏமரா ' என்னும் பெயரெச்ச வடுக்கு கரணிய (காரண) கருமிய (காரிய)ப் பொருளது. ஏ+மரு(வு)=ஏமரு. ஏமருதல் காப்புறுதல். உம்மை எதிர்மறை குறித்த வைத்துக்கொள்வுப் பொருளது. தானே கெடுதல் , ஓட்டுநன் இல்லாத வண்டியிழுக்குங் காளை நெறியல்லா நெறிச்சென்று பள்ளத்தில் விழுந்து கெடுவது போன்றது.

மணக்குடவர்

கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

புலியூர்க் கேசிகன்

இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal)