குறள் (Kural) - 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
பொருள்
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.
Tamil Transliteration
Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare
Ketukkun Thakaimai Yavar.
மு.வரதராசனார்
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.
கலைஞர்
அறிவும்இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.
பரிமேலழகர்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்? (தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் உண்மைத்துணையாளரைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டொழுகும் அரசரை; கெடுக்குந் தகைமையவர் யாரே - கெடுக்குந் திறமையுடைய பகைவர் உலகத்தில் யார் தான் ? குற்றங்கள் அறங்கடையும் (பாவமும்) அரசநேர்பாடு (நீதி) அல்லனவும். உண்மைத்துணையாவது அக்குற்ற மின்மையும் அரசன் கண் அன்புடைமையும். அத்தகையார் அரசு நெறியினின்று நீங்க விடாமையின். அவரைத்துணைக் கொண்டவர் ஒருவராலுங் கெடுக்கப்படார் என்பதாம். இடிக்குந்துணையார் என்பதற்கு நெருங்கிச் சொல்லுமளவினோர் என்று உரைக்கும் உரை சிறந்ததன்று.
மணக்குடவர்
குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர். இது கேடில்லை யென்றது.
புலியூர்க் கேசிகன்
இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) |