குறள் (Kural) - 444

குறள் (Kural) 444
குறள் #444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

பொருள்
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

Tamil Transliteration
Thammir Periyaar Thamaraa Ozhukudhal
Vanmaiyu Lellaan Thalai.

மு.வரதராசனார்

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

கலைஞர்

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

பரிமேலழகர்

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை. (பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் -அறிவு முதலியவற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவராமாறு அவர் வழிநின் றொழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை -அரசர்க்குரிய வலிமைக ளெல்லாவற்றுள்ளுந் தலையானதாம். படை, அரண், பொருள், நட்பு முதலிய வலிமைகளால் நீக்கப் படாத தெய்வத்துன்பங்களை நீக்குதற்கும், அடையப்பெறாத வெற்றியை அடைதற்கும், உதவும் பெரியார் துணை அவ்வலிமைகளினுஞ் சிறந்தது என்பதாம்.

மணக்குடவர்

தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.

புலியூர்க் கேசிகன்

தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்து வருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal)