குறள் (Kural) - 443

குறள் (Kural) 443
குறள் #443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பொருள்
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

Tamil Transliteration
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip
Penith Thamaraak Kolal.

மு.வரதராசனார்

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

சாலமன் பாப்பையா

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

கலைஞர்

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

பரிமேலழகர்

பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்; அரியவற்றுள் எல்லாம் அரிதே -அரசர் பெறக்கூடிய அரும்பேறுக ளெல்லாவற்றுள்ளும் அரியதாம். ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர்

செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல். பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.

புலியூர்க் கேசிகன்

பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal)