குறள் (Kural) - 445

குறள் (Kural) 445
குறள் #445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

பொருள்
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

Tamil Transliteration
Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan
Soozhvaaraik Soozhndhu Kolal.

மு.வரதராசனார்

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

கலைஞர்

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

பரிமேலழகர்

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சூழ்வார் கண்ணாக ஒழுகலால் -மந்திரிமாரைக் கண்ணாகக் கொண்டு அரசியல் நடத்தலால்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -அரசன் மந்திர வினைஞரை ஆராய்ந்து அவருட் சிறந்தவரைத் தனக்குத் துணையாகக் கொள்க. அரசரெல்லார்க்கும் சூழ்வினைத்திறம் இன்மையானும், அத்திற முள்ளவர்க்கும் பல்வேறு தொழிற்சுமை வந்தழுத்துதலானும், அரசர்க்கு இயல்பாகவுள்ள போர்த்திறம் சூழ்வினைத்திறத்தை மறைத்தலானும், மந்திரித்தொழிற்கென்றே பிறந்தவரும் அஃதொன்றையே தொழிலாகக் கொண்டவருமான மந்திரிமாரின்றிப் பொதுவாக எவ்வரசும் இனிது நடைபெறாமையின் , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தலென்றது, திருக்குறள் போலும் முப்பால் அற நூல்களுள் அல்லது அரசியலொன்றே கூறும் பொருள் நூல்களுள், அமைச்சியலிற் சொல்லப்படும் அமைச்சிலக்கணங்களை, மன்னவன் என்னும் குறுநில அரசன் பெயர் இங்குப் பெருநிலவரசனையுங் குறித்து நின்றது.

மணக்குடவர்

அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல்; காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.

புலியூர்க் கேசிகன்

தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal)