குறள் (Kural) - 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பொருள்
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Utranoi Neekki Uraaamai Murkaakkum
Petriyaarp Penik Kolal.
மு.வரதராசனார்
எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.
கலைஞர்
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் - பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக்கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும்,அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம்,கொள்ளுமாறும் கூறப்பட்டன.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உற்ற நோய் நீக்கி -தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; உறாமை முன் காக்கும் பெற்றியார்- அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; பேணிக் கொளல் -அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க. தெய்வத்தால் வருந்துன்பங்கள் மழையின்மை, மிகுமழை, கடுங்காற்று, கொள்ளைநோய், நிலநடுக்கம், கடல்கோள் முதலியன . அவை இறைவனை நோக்கிச்செய்யும் விழாக்களாலும் வேண்டுதல் களாலும் நோன்பினாலும் நீக்கப்படும். மக்களால் வருந்துன்பங்கள் பகைவர் செய்யும் போர், கள்வர் செய்யுங்களவு, கொள்ளைக்காரர் செய்யுங் கொள்ளையடிப்பும் ஆறலைத்தலும், சுற்றத்தாரும் வினைசெய்வாரும் செய்யும் களவுங் கொடுமையும் முதலியன. அவை இன் சொல் (சாமம்) பிரிவினை (பேதம்) கொடை தண்டம் ஆகிய நால்வகை ஆம்புடையுள் (உபாயத்துள் ) ஏற்ற ஒன்றால் அல்லது பலவற்றால் நீக்கப்படும். முற்காத்தலாவது, தெய்வத்தால் வருபவற்றைத் தீக்குறிகளால் அறிந்து விழவு நோன்பு முதலிய சமந்தியால் (சாந்தியால்) தடுத்தலும், மக்களால் வருபவற்றை அவர் குணம், குறிப்பு (இங்கிதம்), தோற்றம் (ஆகாரம்), செயல், சொல் முதலிய வற்றாலறிந்து நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றால் தடுத்தலும், ஆம். குறிப்பு உறுப்பின் தொழில்; தோற்றம் உடம்பின் பார்வை வேறுபாடு.மகிழ்வன செய்தலாவது, முற்றூட்டும் பட்டமுமளித்தலும் கண்ணியமாக நடத்துதலும் கூறிய அறிவுரையைக் கடைப் பிடித்தலுமாம். "கடவுளரையுந் தக்கோரையும் நோக்கிச் செய்யுஞ் சாந்தி" என்று சிறுதெய்வ வணக்கத்தையும், ஆகவே, "புரோகிதரையும்-----------கூறியவாறாயிற்று " . என்று பிராமணப்பூசாரியரையும், பரிமேலழகர் இங்குக் குறித்திருப்பது தவறாம். தானம் என்னுஞ் சொல் தமிழேயாயினும், அது அறப்புறங்கட்குக் கொடுப்பதையே சிறப்பாய்க் குறித்தலின் இங்கு விலக்கப்பட்டது. 'உறாஅமை' இசைநிறையளபெடை.
மணக்குடவர்
அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டில் துன்பம் வராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ளல் வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) |