குறள் (Kural) - 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
பொருள்
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Aranarindhu Mooththa Arivutaiyaar Kenmai
Thiranarindhu Therndhu Kolal.
மு.வரதராசனார்
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
கலைஞர்
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை அறத்தின் இயல்பையறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பை; திறன் அறிந்து தேர்ந்து கொளல் - தரம் அறிந்து ஆய்ந்து பார்த்துத் தழுவிக் கொள்க. அறத்தின் தன்மையை நூலாலன்றி உத்தியாலும் பட்டறிவாலும் அறியவேண்டுதலின், 'அறனறிந்து' என்றார். மூத்தல் ஆண்டாலும் அறிவாலும் முதிர்தல். அறிவுடையார் அரசு நயன்மையையும் (நீதியையும்) உலகியலையும் ஒருங்கே அறிந்தவர். திறனறிதல் தலையிடை கடை யென்னுந் தரமறிதல்.
மணக்குடவர்
அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) |