குறள் (Kural) - 432

குறள் (Kural) 432
குறள் #432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள்
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

Tamil Transliteration
Ivaralum Maanpirandha Maanamum Maanaa
Uvakaiyum Edham Iraikku.

மு.வரதராசனார்

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

சாலமன் பாப்பையா

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

கலைஞர்

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

பரிமேலழகர்

இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும் , இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம். (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ' ரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும் , 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இவறலும்-செலவிடவேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும்; மாண்பு இறந்த மானமும் - தவறான தன்மானமும்; மாணா உவகையும் -அளவிறந்த மகிழ்ச்சியும்; இறைக்கு ஏதம் -அரசனுக்குக் குற்றங்களாம். இவறலால் மேற்கூறிய ஈகை (382), வகுத்தல் (385) கொடையளி, குடியோம்பல் முதலியன செவ்வையாய் நிகழா.மாண்பிறந்த மானமாவது, ஐங்குரவர்க்கும் அந்தணர், சான்றோ ரருந்தவத்தோர் முதியோர்க்கும் வணக்கஞ் செய்யாமை. மாணாவுவகையாவது மகிழ்ச்சியின் மைந்துற்று இகழ்ச்சியிற் கெடுதல் (539).

மணக்குடவர்

உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம். இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)குற்றங்கடிதல் (Kutrangatidhal)