குறள் (Kural) - 431

குறள் (Kural) 431
குறள் #431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

பொருள்
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

Tamil Transliteration
Serukkunj Chinamum Sirumaiyum Illaar
Perukkam Perumidha Neerththu.

மு.வரதராசனார்

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

சாலமன் பாப்பையா

தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

கலைஞர்

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

பரிமேலழகர்

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டுத் தன்மையை யுடைத்து. செருக்கினாற் காவற்கடமை தவறுதலும் பெரியாரைப் பிழைத்தலும், சினத்தினால் ஐம்பெருங்குழுவும் உறுதிச்சுற்றமும் போன்றவற்றின் அன்பை இழத்தலும், சிறுமையினால் பழியும் உயிர்ச்சேதமும், நேருமாதலின், அக்குற்றங்களில்லாத அரசரின் செல்வம் வீறுபெற்றுதென்றார். சிறியோர் இயல்பு என்னுங் கருத்தால் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது.

மணக்குடவர்

பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லா தார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

புலியூர்க் கேசிகன்

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)குற்றங்கடிதல் (Kutrangatidhal)