குறள் (Kural) - 433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
பொருள்
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
Tamil Transliteration
Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak
Kolvar Pazhinaanu Vaar.
மு.வரதராசனார்
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
கலைஞர்
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
பரிமேலழகர்
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
பழிநாணுவார் -பழிக்கு அஞ்சுவார்; தினைத்துணை ஆம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் -தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர். தினை, பனை, என்பன அளவுப்பெயர்கள்; இங்குச் சிறுமை பெருமை பற்றியே வந்தன. உம்மை இழிவு சிறப்பு. 'குற்றம் வகுப் பொருமை. கொள்ளுதல் கொண்டு நீக்குதல்.
மணக்குடவர்
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர். பழிக்கு நாணுவார்.
புலியூர்க் கேசிகன்
பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | குற்றங்கடிதல் (Kutrangatidhal) |