குறள் (Kural) - 430

குறள் (Kural) 430
குறள் #430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள்
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

Tamil Transliteration
Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar
Ennutaiya Renum Ilar.

மு.வரதராசனார்

அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா

ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.

கலைஞர்

அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

பரிமேலழகர்

அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர், அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர். (செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறிவு உடையார் எல்லாம் உடையார் -அறிவுடையார் வேறொன்றுமிலராயினும் எல்லாம் உடையவராவர்; அறிவு இலார் என் உடையரேனும் இலர் - அறிவில்லாதவர் பிறவெல்லா முடையராயினும் ஒன்றுமில்லாதவராவர். எல்லாச் செல்வங்களும் அறிவாலேயே ஆக்கவுங் காக்கவும் படுதலின் , அறிவுடையாரை 'எல்லா முடையார்' என்றும்; பிறசெல்வங்களெல்லாம் ஏற்கெனவே யமைந்திருப்பினும் அவற்றை அழியாமற்காத்தற்கும், அவற்றிற்குத் தெய்வத்தால் அழிவுநேர்ந்த விடத்துப் புதிதாய்ப்படைத்தற்கும், வேண்டிய கருவியாகிய அறிவின்மையின், அறிவிலாரை ' என்னுடைய ரேனுமிலர்' என்றும், கூறினார். "நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்" - (நாலடி. 251)

மணக்குடவர்

அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர். இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)