குறள் (Kural) - 429

குறள் (Kural) 429
குறள் #429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

பொருள்
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

Tamil Transliteration
Edhiradhaak Kaakkum Arivinaark Killai
Adhira Varuvadhor Noi.

மு.வரதராசனார்

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா

நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

கலைஞர்

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

பரிமேலழகர்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை. ('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே யறிந்து தம்மைக் காக்கவல்ல அறிவுடையார்க்கு; அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் அஞ்சி நடுங்குமாறு வரக்கூடிய துன்பம் ஒன்று மில்லை. நோய்செய்யும் துன்பத்தை நோயென்றார். நோவது நோய். காத்தலாவது வராமல் தடுத்தல், அல்லது தம்மைத்தாக்காதவாறு தமக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் தேடிவைத்துக் கொள்ளுதல். வருமுன் காத்தல், வருங்கால் காத்தல், வந்தபின் காத்தல் என்னும் மூவகைக் காப்பினுள் முதலதே தலையாயதும் செய்ய வேண்டுவதும் எனக்கூறியவாறு.

மணக்குடவர்

துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை. இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.

புலியூர்க் கேசிகன்

பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)