குறள் (Kural) - 423

குறள் (Kural) 423
குறள் #423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள்
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

Tamil Transliteration
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul
Meypporul Kaanpa Tharivu.

மு.வரதராசனார்

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

கலைஞர்

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

பரிமேலழகர்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல் , நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்-எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும்;அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முக்குணங்களும் பெரும்பாலர்க்கு மாறி மாறி வருவதால், நற்பொருள் பகைவர் வாயினும் தீப்பொருள் நண்பர் வாயினும், சிறந்த பொருள் இழிந்தோர் வாயினும் இழிந்தபொருள் சிறந்தோர் வாயினும், கேட்கப்படுதலால் , 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்குத்தொடர் பன்மைபற்றிவந்தது. வாய் என்பது சொல்லும் பொருட்கு ஏற்காமையுணர நின்றது. சொல்வாரை நோக்காது சொல்லும் பொருளையே நோக்கி, கொள்ளுவது அல்லது தள்ளுவது அறிவென்பதாம்.

மணக்குடவர்

யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.

புலியூர்க் கேசிகன்

எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)