குறள் (Kural) - 422

குறள் (Kural) 422
குறள் #422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

பொருள்
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

Tamil Transliteration
Sendra Itaththaal Selavitaa Theedhoreei
Nandrinpaal Uyppa Tharivu.

மு.வரதராசனார்

மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா

மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.

கலைஞர்

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

பரிமேலழகர்

சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சென்ற இடத்தால் செலவிடா- மனத்தை அது சென்றவிடமெல்லாஞ் செல்லவிடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு- தீயவழியை நீக்கி நல்ல வழியிற் செலுத்துவது அறிவாம். விடாது என்பது கடைக்குறைந்து நின்றது. செல்லுதல் என்னும் வினைக்கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'ஒரீஇ' இன்னிசையளபெடை, இங்கு மனத்தைக் குதிரைபோற் கருத வைத்தது குறிப்புருவகம்.

மணக்குடவர்

உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது. இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.

புலியூர்க் கேசிகன்

மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)