குறள் (Kural) - 421

குறள் (Kural) 421
குறள் #421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

Tamil Transliteration
421 Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum
Ullazhikka Laakaa Aran.

மு.வரதராசனார்

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

சாலமன் பாப்பையா

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

கலைஞர்

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

பரிமேலழகர்

அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம். (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறிவு அற்றம் காக்கும் கருவி - நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; செறுவார்க்கும் அழிக்கல் ஆகா உள் அரண்- அதுவுமன்றிப் பகைவராலும் அழிக்கமுடியாத உள்ளரணாம். காத்தல் - முன்னறிந்து தடுத்தல். உள்ளரண் அகக்கரணக் கூறாகிய அரண், உட்புகுந்தழிக்க முடியாத நுண்பொருள் வடிவினது.

மணக்குடவர்

ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)அறிவுடைமை (Arivutaimai)