குறள் (Kural) - 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
பொருள்
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
Tamil Transliteration
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa Rizhaiththunarn
Theentiya Kelvi Yavar.
மு.வரதராசனார்
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
சாலமன் பாப்பையா
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
கலைஞர்
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
பரிமேலழகர்
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார். ('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் பல்வேறு வகையில் திரண்ட கேள்வியறிவினை யுடையார்; பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - ஏதேனுமொரு பொருளைத் தவறாக உணர்ந்த விடத்தும், தமக்குப் பேதைமையூட்டுஞ் சொற்களைப் பிறர்க்குச் சொல்லார். கல்வி கேள்வி யென்னும் இருவழியாலும் அறிவுநிரம்பியவர் ஒன்றைப் பிறழவுணர்ந்த விடத்தும், பொருத்தமாகச் சொல்வர் அல்லது சொல்லாமலே விட்டு விடுவர் என்பது கருத்து. பிழைத்துணர்தல் - பிழையாகவுணர்தல், 'பேதைமை' ஆகுபொருளது. மயக்க நிலையிலும் பிறழாதுரைப்பர் என்பதற்கு, "பிழைத்துணர்ந்தும்" என்னும் தொடர் இடந்தராமை காண்க.
மணக்குடவர்
(இ-ள்) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.
புலியூர்க் கேசிகன்
நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | கேள்வி (Kelvi) |