குறள் (Kural) - 416

குறள் (Kural) 416
குறள் #416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

பொருள்
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

Tamil Transliteration
Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum
Aandra Perumai Tharum.

மு.வரதராசனார்

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

சாலமன் பாப்பையா

சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

கலைஞர்

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

பரிமேலழகர்

எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான். ('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எனைத்தானும் நல்லவை கேட்க -- ஒருவன் எத்துணைச் சிறிதாயினும் நற்பொருள்களைக் கேட்டறிக; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் -அக்கேள்வியறிவு அத்துணைச் சிறிதாயினும் நிறைந்த வலிமை பெற ஏதுவாகும். எனைத்து அனைத்து என்னும் அளவுச் சொற்கள் பொருளளவுங் கால அளவும் பற்றியன. ஆனும் என்பது ஆயினும் என்பதன்மரூஉ. பலதுளி பெருவெள்ளம். ஆவதுபோல் பல அறிவுத்துணுக்குகள் திரண்டு பேரறிவாவதுடன் ஒரே அறிவுக்குறிப்பு ஒரோவழி உயிரைக் காப்பதும் பெருவெற்றி தருவது முண்டு . ஆதலால் , கேள்வியறிவின் சிற்றளவு பற்றி இகழக்கூடாது என்பதாம்.

மணக்குடவர்

எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கேள்வி (Kelvi)