குறள் (Kural) - 404

குறள் (Kural) 404
குறள் #404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

பொருள்
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

Tamil Transliteration
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar.

மு.வரதராசனார்

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

கலைஞர்

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

பரிமேலழகர்

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்-கல்லாதவனுக்கு ஒரோவழி தற்செயலாகத்தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அவனைப் பாராட்டுமளவில் அதை உயர்வாகக் கொள்ளார். உம்மை அருமை குறித்து நின்றது. ஒட்பம்=அறிவொளி. ஒள்-ஒட்பு-ஒட்பம். ஒள்-ஒளி, ஒரோவழி=ஏதேனுமொரு சமையம், மிக அருகி. கல்லாதவனுக்குத் தோன்றும் ஒண்கருத்து. ஏ ர ல் (நத்தை) மணலில் ஊருங்கால் நேருங் கீறலில் தற்செயலாக அமையும் ஓர் எழுத்துவடிவம் போன்றதாகலின், அதை அவனது உண்மையறிவின் விளைவாகக் கருதார் என்பதாம்.

மணக்குடவர்

கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.

புலியூர்க் கேசிகன்

கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்லாமை (Kallaamai)