குறள் (Kural) - 405

குறள் (Kural) 405
குறள் #405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

Tamil Transliteration
Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu
Sollaatach Chorvu Patum.

மு.வரதராசனார்

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

சாலமன் பாப்பையா

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

கலைஞர்

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

பரிமேலழகர்

கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும். ('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கல்லா ஒருவன் தகைமை-நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும்; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் -அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும் போது கெட்டுப்போம். கற்றவன் என்பது அவாய்நிலையான் வந்தது. "காணாமல் வேணதெல்லாங் கத்தலாங் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே-நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி" என்னும் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் தனியன் இக்குறட் பொருளை விளக்குவதாகும்:

மணக்குடவர்

கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

புலியூர்க் கேசிகன்

கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர் போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்லாமை (Kallaamai)