குறள் (Kural) - 403

குறள் (Kural) 403
குறள் #403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

பொருள்
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin.

மு.வரதராசனார்

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

சாலமன் பாப்பையா

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

கலைஞர்

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

பரிமேலழகர்

கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின்-தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் கண் உரைநிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாதவரும் நனி நல்லர்-கல்லாத வரும் மிக நல்லவரேயாவர். உம்மை இழிவுசிறப்பு . அவையின்கண் அமைதியாயிருக்குங் கல்லாதார், பிறராற் பழிக்கப்படாது தம் சிறு மதிப்பைக் காத்துக் கொண்டும், அவையோர்க்கு வெறுப்பை விளைத்து அங்குநின்றும் அகற்றப்படாது அறிஞர் உரைகேட்டு இன்புறுவதொடு அறிவடைந்தும் , நல்லவராவ ராதலால் ' நனிநல்லார்' என்றார். ' நனி' உரிச்சொல். கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே யிரா அ துரைப்பினும் நாய்குரைத் தற்று. (நாலடி. 254)

மணக்குடவர்

கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.

புலியூர்க் கேசிகன்

கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்லாமை (Kallaamai)