குறள் (Kural) - 402

குறள் (Kural) 402
குறள் #402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

பொருள்
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

Tamil Transliteration
Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum
Illaadhaal Penkaamur Ratru.

மு.வரதராசனார்

எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

சாலமன் பாப்பையா

படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

கலைஞர்

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

பரிமேலழகர்

கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும். ('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கல்லாதான் சொல் காமுறுதல் - க ல் வி யி ல் லா தவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்ற அற்று-இயல்பாகவே முலையிரண்டுமில்லாத பேடி பெண்டன்மையை விரும்பினாற்போலும். பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும்அந் தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். (தொல் 487) ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே(தொல் 495) என்றவாறு, பேடிப்பெயர் பெண்பாலீறு பெ ற் ற து. உம்மை முற்றும்மை. இருவர் காமுறுதலும் இழிநிலைப்பட்ட தென்பதாம். இனி, கல்லாதான் சொல்லைப் பிறர் காமுறுதல் முலையிரண்டுமில்லாதாள் பெண்டன்மையைப் பிறர் காமுறுதல்போலும், என்றுமாம்.

மணக்குடவர்

கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.

புலியூர்க் கேசிகன்

கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்லாமை (Kallaamai)