குறள் (Kural) - 4

குறள் (Kural) 4
குறள் #4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள்
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

Tamil Transliteration
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila.

மு.வரதராசனார்

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

கலைஞர்

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

பரிமேலழகர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப மில்லை. விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்லவனாகவுமிருப்பதனாலும், அவனடியடைந்தார்க்கு எங்கும் என்றும் எவ்வகைத் துன்பமும் இல்லையென்பது.

மணக்குடவர்

இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

புலியூர்க் கேசிகன்

விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu)