குறள் (Kural) - 5

குறள் (Kural) 5
குறள் #5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொருள்
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்..

Tamil Transliteration
Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu.

மு.வரதராசனார்

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சாலமன் பாப்பையா

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

கலைஞர்

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

பரிமேலழகர்

இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)

ஞா.தேவநேயப் பாவாணர்

இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும். வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின் இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும் அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வுநவிற்சியும் இன்மைநவிற்சியுமேயாதலாலும், எல்லாவாற்றலும் என்றும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் - விரும்பிச் சொல்லுதல். இறைவன் - எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம்.

மணக்குடவர்

மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

புலியூர்க் கேசிகன்

இறைவனின் மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu)