குறள் (Kural) - 3

குறள் (Kural) 3
குறள் #3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள்
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

Tamil Transliteration
Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar.

மு.வரதராசனார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சாலமன் பாப்பையா

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

கலைஞர்

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

பரிமேலழகர்

மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்)

ஞா.தேவநேயப் பாவாணர்

மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் - அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார். மலர் என்னுஞ்சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்சியாலும், மலர்மிசையேகினான் என்பது இயல்பாக இறைவன் பெயராதற்கு ஏற்காமையாலும், 'பூமேல் நடந்தான்' என்னும் அருகன் பெயரையே ஆசிரியர் இறைவனுக்குப் பொருந்துமாறு ஆண்டார் என்பது தெரிகின்றது. "மலர்மிசை நடந்தோன்" என்று இளங்கோவடிகளும் கவுந்தி யடிகள் கூற்றாகக் கூறுதல் காண்க (சிலப். 10:204.). சமணர் தம் பொய்யான சமயத்தை விட்டுவிட்டு மெய்யான கடவுளை வணங்க வேண்டுமென்பது இக்குறளின் உட்குறிப்பு. அடியாரின் உள்ளத்தாமரை நோக்கி ஏகுவானை ஏகினான் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறியது, விரைவு பற்றிய கால வழுவமைதி . அடிசோர்தல் - இடைவிடாது நினைத்து அதற்கேற்ப ஒழுகுதல்.

மணக்குடவர்

மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

புலியூர்க் கேசிகன்

அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu)