குறள் (Kural) - 399

குறள் (Kural) 399
குறள் #399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

Tamil Transliteration
399 Thaamin Puruvadhu Ulakin Purak Kantu
Kaamuruvar Katrarin Thaar.

மு.வரதராசனார்

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

சாலமன் பாப்பையா

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

கலைஞர்

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

பரிமேலழகர்

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர். (தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும் 'யாண்டு பலவாக நரையில மாயினேம்' (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகை யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத்தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கற்று அறிந்தார் - சிறந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளைச் செவ்வையாக அறிந்தவர்; தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு - தம் கல்வியால் தாம் இன்புறுவதொடு உலகமும் இன்புறுவது கண்டு; காமுறுவர்-மேன்மேலுங் கற்கவும் கற்பிக்கவும் விரும்புவர். தாமின்புறுதலாவது, நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளாலும், தாம் இம்மையிற்பெறும் புகழ் பொருள் போற்றுதலாலும், மறுமையிற்பெறும் நற்பத நம்பிக்கையாலும், இடையறாது மகிழ்தல். உலகின்புறுதலாவது, இன்று செவிக்கினிய சிறந்த விருந்துண்டோ மென்றும், அறியாதபல அரும்பொருள்கள் எளிதாயறிந்தோம் என்றும், இத்தகைய சொற்பொழிவு கேட்டது எம் தவப்பேறேயென்றும், இன்னுஞ் சிலமுறை கேட்பின் யாமும் புலவராய் விடுவேமென்றும், பாராட்டி மகிழ்தல். தாமின்புறுவதை உலகுமின்புற்றுப் போற்றுவது, கரும்பு தின்னக்கைக்கூலி கொடுத்தாற்போன்று ஊக்குவதால் மேலுங் காமுறுவர் என்றார். இனி, இக்குறளை, கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு உலகு.இன்புறக் காமுறுவர் என்று, கொண்டு கூட்டுப் பொருள்கோள் நடையாக மாற்றின், கண்டு என்னுஞ் சொல்லொடு பொருந்தாமையால், அது ஆசிரியர் கருத்தன்றென விடுக்க.

மணக்குடவர்

தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர். இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.

புலியூர்க் கேசிகன்

தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்வி (Kalvi)