குறள் (Kural) - 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
பொருள்
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
Tamil Transliteration
Orumaikkan Thaan Katra Kalvi Oruvarku
Ezhumaiyum Emaap Putaiththu.
மு.வரதராசனார்
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
கலைஞர்
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
பரிமேலழகர்
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவற்கு - ஒருவனுக்கு ; தான் ஒருமைக்கண்கற்ற கல்வி -தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுமையும் ஏமாப்பு உடைத்து -எழுபிறப்பளவுந் தொடர்ந்து அரணாகநின்று உதவுந் தன்மையயுடையது. கல்வியறிவு வினைகள் போல உயிரைப் பற்றித் தொடர்தலின், 'எழுமையும் ஏமாப்புடைத்து ' என்றார் . 'எழுமை ' என்றது தொடர்ந்த எழுமக்கட்பிறப்பை. அல்லாக்கால் அவ்வறிவு பயன்படாமை அறிக. ஏமாப்பு பாதுகாப்பு. உதவுதல் நல்வழியிற்செலுத்தி நலமாக வாழ்வித்தல். ஏழென்பது இங்குக் காலநீட்சி பற்றிய நிறைவெண்.
மணக்குடவர்
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
புலியூர்க் கேசிகன்
ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | கல்வி (Kalvi) |