குறள் (Kural) - 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
பொருள்
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
Tamil Transliteration
Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku
Iraiyendru Vaikkap Patum.
மு.வரதராசனார்
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
கலைஞர்
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
பரிமேலழகர்
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் - நடுநிலையாகத் தீர்ப்புச்செய்து எவ்வகையிலும் துன்பம் நேராது குடிகளைக் காக்கும் அரசன்; மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பால் மாந்தனாயினும் அவனால் ஆளப்பெறும் மக்களாற் கடவுளென்றே கருதப்படுவான். முறைசெய்தலாவது, கொற்கைப் பாண்டியன் போலத் தன்னையும் மன் ( மனு) முறைகண்ட சோழன் போலத் தன் மகனையும் தண்டித்தல். காப்பாற்றுதல் தெய்வத்தால் வருந் துன்பத்தையும் வழிபாடு, நோன்பு, திருவிழா முதலியவற்றால் தடுத்துக்காத்தல். இறை இறைவன் என்னும் இருவடிவிலுமுள்ள கடவுட்பெயர் அரசனையுங் குறிப்பதும், கோயில் என்னும் சொல் கடவுள்வழிபாட்டு மனைக்கும் அரசனது அரண்மனைக்கும் பொதுப் பெயராயிருப்பதும், இக்குறட் கருத்தை மெய்ப்பிக்கும். திருவாய்க்கேள்வி, திருமந்திரவோலை முதலிய அரசியலதிகாரிகளின் பதவிப்பெயர்கள், திரு என்னும் அடை பெற்றிருப்பதும் இக்கருத்துப் பற்றியே.
மணக்குடவர்
குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.
புலியூர்க் கேசிகன்
முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | இறைமாட்சி (Iraimaatchi) |