குறள் (Kural) - 389

குறள் (Kural) 389
குறள் #389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

பொருள்
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

Tamil Transliteration
Sevikaippach Chorporukkum Panputai Vendhan
Kavikaikkeezhth Thangum Ulaku.

மு.வரதராசனார்

குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

சாலமன் பாப்பையா

இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

கலைஞர்

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

பரிமேலழகர்

சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம். ('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - அரசன் தீய வழியிற் செல்லும் போது அஞ்சாது இடித்துரைக்கும் நல்லமைச்சர், செவிக்கு இன்னாதனவாகச் சொல்லும் சொற்கள் பொறுக்கத் தகாதனவாயினும் அவற்றின் இனிய விளைவு நோக்கிப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனது; கவிகைக் கீழ் உலகு தங்கும்-குடைநிழலில் உலகந்தங்கும். 'செவிகைப்ப' என்பதற்கேற்ப இடித்துரைக்கும் நல்லமைச்சர் என்பது வருவித்துரைக்கப்பட்டது. கைத்தல் கசத்தல். இனித்தல் இனிமையைக் குறித்தலாற் கசத்தல் இன்னாமையைக் குறித்தது. நாவின் புலம் செவியின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது இனம் பற்றி. 'கவிகை' 'உலகு' இரண்டும் ஆகுபெயர். தங்குதல் இனிதாய். வாழ்ந்திருத்தல். சிறந்த அறிவுரைகளைக் கைக்கொள்வதால் உலகம் முழுதும் ஆள்வான் என்பதாம்.

மணக்குடவர்

தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.

புலியூர்க் கேசிகன்

சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இறைமாட்சி (Iraimaatchi)