குறள் (Kural) - 387

குறள் (Kural) 387
குறள் #387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

பொருள்
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

Tamil Transliteration
Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal
Thaankan Tanaiththiv Vulaku.

மு.வரதராசனார்

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

சாலமன் பாப்பையா

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

கலைஞர்

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

பரிமேலழகர்

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம். (இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும்கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடன் வேண்டியவற்றைக் கொடுத்து அன்பாகக் காக்கவல்ல அரசனுக்கு; இவ்வுலகு தன் சொலால் தான் கண்ட அனைத்து - இவ்வுலகம் தன்புகழோடு கூடித் தான் கருதியவாறு அமைவதாம். 'இன்சொல்' குரலாலும் பொருளாலும் விளைவாலும் இனிய சொல். ஈதல் புலவர், பாணர், கூத்தர் முதலியவர்க்குப் பரிசும் முற்றூட்டும் அளித்தலும், கோயில்கள், துறவோர் பள்ளிகள், ஊட்டுப் புரைகள் முதலியவற்றிற்கு இறையிலியாக அறப்புறம் விடுதலும். அளித்தல் மேற்கூறிய ஐவகையாலும் தீங்கு நேராமற்காத்தல். இம் மூன்றும் ஒருங்கே யமைதல் அரிதாதலின் 'வல்லாற்கு' என்றார். இவ்வுலகம் தான் கருதியவாறு அமைதலாவது தனக்கு வயப்பட்டுத் தான் விரும்பிய வாறு பயன்படுதல்.

மணக்குடவர்

இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.

புலியூர்க் கேசிகன்

இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இறைமாட்சி (Iraimaatchi)