குறள் (Kural) - 386

குறள் (Kural) 386
குறள் #386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

பொருள்
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

Tamil Transliteration
Kaatchik Keliyan Katunjollan Allanel
Meekkoorum Mannan Nilam.

மு.வரதராசனார்

காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

சாலமன் பாப்பையா

நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).

கலைஞர்

காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

பரிமேலழகர்

காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

காட்சிக்கு எளியன் - முறைவேண்டினவர்க்கும் குறைவேண்டினவர்க்கும் காண்பதற் கெளியவனாய்; கடுஞ்சொல்லன் அல்லனேல்-பகைவரல்லாத யாரிடத்தும் இன்சொற் சொல்பவனாயிருப்பின்; மன்னன் நிலம் மீக் கூறும் - அவ்வரசனது நாட்டை ஏனை நாடுகளினுஞ் சிறந்ததாக உலகம் உயர்த்துக் கூறும். முறைவேண்டினவர் வலியவரால் தாக்குண்டும் இழப்புண்டும் துன்புற்றவர். குறைவேண்டினவர் வறுமையால் வருந்தியவர். காட்சிக்கெளிமையாவது அலுவல் நேரத்தில் ஓலக்க மண்டபத்திலும் நெருக்கடி நிலைமையில் அரண்மனையிலும் காணக்கூடியவனாயிருத்தல். கடுஞ் சொல்லாவது சினத்தாலும் பொருளாலும் விளைவாலும் தீதாகிய சொல். நாட்டையுயர்த்துக் கூறுதல் அரசனையுயர்த் தலையுந்தழுவும். உலகம் என்னும் ஏழுவாய் தொக்கு நின்றது. உலகம் செங்கோலரசனது நாட்டை மீக்கூறுவது. "கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே". (சிலப். 13:5-10) என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாண்டியன் நாட்டைச் சிறப்பித்துக் கூறியது போன்றது.

மணக்குடவர்

காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர். இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இறைமாட்சி (Iraimaatchi)