குறள் (Kural) - 377

குறள் (Kural) 377
குறள் #377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

பொருள்
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

Tamil Transliteration
Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti
Thokuththaarkku Thuyththal Aridhu.

மு.வரதராசனார்

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

சாலமன் பாப்பையா

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

கலைஞர்

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

பரிமேலழகர்

கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வகுத்தான் வகுத்த வகை அல்லால் - ஊழ்த் தெய்வம் அவரவர்க்கு இன்பதுன்பம் வகுத்த வகைப்படி யல்லாமல்; கோடி தொகுத்தார்க்கும்-கோடிக்கணக்கிற் பொருளை வருந்தி யீட்டியவர்க்கும்; துய்த்தல் அரிது - அப்பொருளால் இன்பம் நுகர்தல் உண்டாகாது. தீயூழுடையான் செல்வந்தேடுவதற்கு நல்ல நிலைமைகளும் தீயனவாக முடியுமென்று மேற்கூறினார். இனி, நல்லநிலைமைகள் நல்லனவாகவே முடிந்து செல்வஞ்சேரினும், அச்செல்வத்தை அவன் நுகரக் கொடுத்து வைக்கப்பெறான் என்று இங்குக் கூறினார். ஒருவன் தான் தேடினதைத் தான் நுகராமை நோய், மூப்பு, சாக்காடு, கருமித்தனம், களவு, கவர்வு, இயற்கைச்சேதம் முதலிய பல கரணகங்களால் நேர்வதாம். "பால்வரை தெய்வம் வினையே பூதம் -------------------------------- பால்பிரிந் திசையா வுயர்திணை மேன". (கிளவி. 58) "நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே" (கிளவி. 59) "இசைத்தலு முரிய வேறிடத் தான". (கிளவி. 60) என்னும் தொல்காப்பிய நெறிப்படி, 'வகுத்தது' என்று சொல்லால் அஃறிணையா யிருப்பது 'வகுத்தான்' என்று உயர்திணையாயிற்று. 'கோடி' என்பது பால்பகா வஃறிணைப்பெயராகக் கொள்ளப்படும். அவ்வெண் இங்குப் பொருள்களை மட்டுமின்றி உயர்ந்த காசையுங் குறிக்கும். ஒருவன் செல்வத்தைக் காசு வகையில் மதிப்பதே வழக்கமாதலாலும், காசைக் கொண்டு எல்லா நுகர் பொருள்களையும் என்றும் பெறலாமாதலாலும், பொருள்களை விளைப்போரும் தொகுப்போரும் பெறுவோரும் தம் நுகர்ச்சிக்கு மிஞ்சியவற்றைக் காசாக மாற்றிவிடுவராதலாலும், இட்டுவைக்க இடமில்லா வாறும் நாட்பட்டுக்கெடுமாறும் முன்பின் வேண்டியபொருள்களையெல்லாம் ஒருங்கே வாங்குவாரின்மையாலும், கோடியென்பது பொருட்டொகை யென்பதினுங் காசுத்தொகை யென்பதே பொருத்தமாம்.கோடியென்னும் பெருந்தொகை தொகுத்தார்க்கும் என்னும் சிறப்பும்மை தொக்கது.

மணக்குடவர்

விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)ஊழியல் (Oozhiyal)
அதிகாரம் (Adhigaram)ஊழ் (Oozh)