குறள் (Kural) - 378

குறள் (Kural) 378
குறள் #378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

பொருள்
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

Tamil Transliteration
Thurappaarman Thuppura Villaar Urarpaala
Oottaa Kazhiyu Menin.

மு.வரதராசனார்

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

சாலமன் பாப்பையா

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

கலைஞர்

நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

பரிமேலழகர்

துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உறல் பால ஊட்டா கழியும் எனின் - அடைய வேண்டிய துன்பங்களை அடைவிக்காது தீயூழ்கள் நீங்குமாயின்; துப்பரவு இல்லார் மன் துறப்பர் -நுகர்ச்சி யில்லாத வறியர் பெரும் பாலும் துறவியராவர். பரிமேலழகர் ஒழியிசைப் பொருளாகக் கூறுவது பாவிலேயே அடங்கியிருத்தலால், மன்னிடைச் சொற்கு மிகுதிப் பொருள் கொள்ளப்பெற்றது. துன்பங்களின் பன்மைபற்றி அவற்றை யூட்டும் ஊழையும் பன்மையாகக் கொண்டார். வலிமிகாமையால் 'ஊட்டா' எதிர் மறைமுற்றெச்சம். துறவுநிலை இயற்கையாக அமைந்திருந்தும் அதை வீடுபேற்றிற்குப் பயன் படுத்தாவாறு ஊழ்கெடுக்குமென்பது இங்குக் கூறப்பட்டது.

மணக்குடவர்

நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின். இது துறவறமானது ஊழினால் வருமென்றது.

புலியூர்க் கேசிகன்

வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால் துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்!

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)ஊழியல் (Oozhiyal)
அதிகாரம் (Adhigaram)ஊழ் (Oozh)