குறள் (Kural) - 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
பொருள்
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
Tamil Transliteration
Pariyinum Aakaavaam Paalalla Uyththuch
Choriyinum Pokaa Thama.
மு.வரதராசனார்
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
சாலமன் பாப்பையா
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
கலைஞர்
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
பரிமேலழகர்
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
பால் அல்ல பரியினும் ஆகாவாம் -ஊழால் தமக்கு உரிய வல்லாத பொருள்கள் வருந்திக் காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா -ஊழால் தமக்குரிய பொருள்கள் வெளியே கொண்டுபோய்க் கொட்டினும் தம்மைவிட்டு நீங்கா. பொருள்களின் இருப்பும் போக்கும் ஊழாலன்றிக் காப்பாலும் காவாமையாலும் நிகழா என்பதாம்.
மணக்குடவர்
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.
புலியூர்க் கேசிகன்
வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாத போது எதுவுமே ஆகாது; கொண்டு போய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் தம் பொருள் போகாது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | ஊழியல் (Oozhiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊழ் (Oozh) |