குறள் (Kural) - 375

குறள் (Kural) 375
குறள் #375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

Tamil Transliteration
Nallavai Ellaaan Theeyavaam Theeyavum
Nallavaam Selvam Seyarku.

மு.வரதராசனார்

செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா

நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

கலைஞர்

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

பரிமேலழகர்

செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்வம் செயற்கு - செல்வத்தைத்தேடுதற்கு; நல்லவை எல்லாம் தீய ஆம் - தீயூழுற்ற விடத்து நல்ல நிலைமைகளெல்லாம் தீயனவாகிப் பயன்படாது போம்; தீயவும் நல்ல ஆம் - நல்லூழுற்ற விடத்துத் தீயநிலைமைகளும் நல்லன வாகிப் பயன்படும். நல்லவும் தீயவுமான நிலைமைகள் காலமும் இடமும் கருவியும் முயற்சியும் துணையாட்களும் பற்றியனவாம். நல்லூழ் தீயூழ் என்பன அதிகாரத்தால் வந்தன. பொருளீட்டும் முயற்சிக்குரிய துணைக்கரணங்களும் ஊழால் வேறுபடு மென்பது இங்குக் கூறப்பட்டது.

மணக்குடவர்

செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

புலியூர்க் கேசிகன்

செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவையாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)ஊழியல் (Oozhiyal)
அதிகாரம் (Adhigaram)ஊழ் (Oozh)