குறள் (Kural) - 374

குறள் (Kural) 374
குறள் #374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

பொருள்
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

Tamil Transliteration
Iruveru Ulakaththu Iyarkai Thiruveru
Thelliya Raadhalum Veru.

மு.வரதராசனார்

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

சாலமன் பாப்பையா

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

கலைஞர்

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

பரிமேலழகர்

உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உலகத்து இயற்கை இருவேறு -உலகத்தில் உடைமைபற்றி ஊழினாலுண்டாகிய இயற்கை இருவேறு நிலைமைய தாம்; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு- செல்வராதலும் வேறு; தெள்ளிய அறிஞராதலும் வேறு. அறிவுடையோர் நல்லவராயும் உலக இன்பம் பொருளாற்பெறக் கூடியதாயு மிருத்தலால், அறிவுடையோரன்றோ செல்வராயிருத்தல் வேண்டும்! அங்ஙனமன்றி அறிவுடையோர் வறியராயிருந்து துன்புறவும் அல்லாதார் செல்வராயிருந்து இன்புறவுமன்றோ காண்கின்றோம்! இதற்குக் கரணகம் ஊழ்வேறுபாடே யென்பது கருத்தாம். அறிவுடையோர் பொதுநலங்கருதிப் பல ஒழுக்க வரம்புகளையும் நெறிமுறைகளையுங் கைக்கொண்டு நேர்மையாக வாழ்க்கை நடத்துவது பொருளீட்டு நெறிக்கு மாறாயிருப்பதால், அவர்களிடத்திற்செல்வஞ் சேர்வதில்லை. என்றுந் தன்னலமாக விருந்து எல்லார்க்கும் நல்லவராக நடித்துப் பொருளீட்டுவதையே குறிக்கோளாக் கொண்டு, நெறிமுறையொன்றுங் கடைப்பிடியாதவரிடமே செல்வஞ் சேர்வதாம். இம் மாறுபட்ட நிலைமையையே, "பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந் தல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின் நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே பூவின் கிழத்தி புலந்து" என்று நகைச் சுவைக் கரணகங் காட்டிப் பாடினார் பண்டைப் புலவரொருவர்.

மணக்குடவர்

செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு.

புலியூர்க் கேசிகன்

ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)ஊழியல் (Oozhiyal)
அதிகாரம் (Adhigaram)ஊழ் (Oozh)