குறள் (Kural) - 373

குறள் (Kural) 373
குறள் #373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

பொருள்
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

Tamil Transliteration
Nunniya Noolpala Karpinum Matrundhan
Unmai Yarive Mikum.

மு.வரதராசனார்

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

சாலமன் பாப்பையா

பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).

கலைஞர்

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

பரிமேலழகர்

நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நுண்ணிய பலநூல் கற்பினும்-பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் நுண்ணிய பொருள்களையுணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும்-அவனுக்குப் பின்னும் அவ்வூழாலாகிய பேதைமையுணர்வே மேற்படும். பொருளின் நுண்மை நூல்மேலேற்றப்பட்டது. மேற்படுதல் நுண்ணூலறிவை முற்றும் மறைத்தல் அதனால் தீயூழினர்க்கு இழப்பைத்தடுக்க நூலறிவு பயன்படா தென்பதாம்.

மணக்குடவர்

நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.

புலியூர்க் கேசிகன்

நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)ஊழியல் (Oozhiyal)
அதிகாரம் (Adhigaram)ஊழ் (Oozh)