குறள் (Kural) - 372

குறள் (Kural) 372
குறள் #372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

பொருள்
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

Tamil Transliteration
Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum
Aakaloozh Utrak Katai.

மு.வரதராசனார்

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

கலைஞர்

அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

பரிமேலழகர்

இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இழவு ஊழ் (உற்றக்கடை) பேதைப்படுக்கும் -ஒருவன் தன்செல்வத்தை இழத்தற்குக்கரணகமான தீயூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப்பேரறிஞனாயிருந்தாலும் அவனைப் பேதையாக்கும்; ஆகல்ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும்-இதற்கு மாறாக, அவனுக்குச் செல்வஞ் சேர்வதற்கேற்ற நல்லூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப் பேதையாயிருந்தாலும் அவனைப் பேரறிஞனாக்கும். செல்வம் என்பது அதிகாரத்தால் வந்தது. 'இழவூழ்', 'ஆகலூழ்' என்பன 4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. உற்றக்கடை என்பது இறுதிநிலை விளக்கணி. மேற்கூறிய முயற்சிக்கும் சோம்பற்கும் ஏதுவான நிலைமைகள் இங்குக் கூறப்பட்டன.

மணக்குடவர்

கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.

புலியூர்க் கேசிகன்

இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)ஊழியல் (Oozhiyal)
அதிகாரம் (Adhigaram)ஊழ் (Oozh)