குறள் (Kural) - 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
பொருள்
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
Tamil Transliteration
Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul
Pokoozhaal Thondrum Mati.
மு.வரதராசனார்
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
சாலமன் பாப்பையா
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
கலைஞர்
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
பரிமேலழகர்
கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.)
ஞா.தேவநேயப் பாவாணர்
கைப்பொருள் ஆகுஊழால் அசைவின்மை தோன்றும்-ஒருவன் கையிற் பொருள் சேர்தற்குக் கரணகமான நல்லூழால் முயற்சியுண்டாகும்; போகு ஊழால் மடி தோன்றும் -அவன் கையிலுள்ள பொருள் தீர்தற்குக்கரணகமான தீயூழாற் சோம்பலுண்டாகும். 'ஆகூழ்,' 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் கரணகப் பொருளன . அசைவு சோம்பல். ஒருவனுக்குச் செல்வம் தன்முயற்சியாலும் வரும்; முன்னோர் தேட்டாகப் பிறர் முயற்சியாலும் வரும். அங்ஙனமே ஒருவன்செல்வத்திற்கு அழிவு அவன் செயலாலும்வரும்; கள்வர் பகைவர் முதலிய பிறர் செயலாலும் வரும். ஒருவனுக்குச் செல்வத்தின் ஆக்கம் போன்றே அழிவும் பிறரால்மட்டுமன்றித் தன்னாலும் நேருமாறு,ஊழே முயற்சியையும் சோம்பலையும் தோற்றுவிக்கு மென்பது இங்குக் கூறப்பட்டது. 'கைப்பொருள்' என்பது முன்னும் பின்னுஞ் சென்றியைதலால் தாப்பிசைப்பொருள்கோளும் இடை நிலை விளக்கணியுமாகும்.
மணக்குடவர்
ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.
புலியூர்க் கேசிகன்
ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | ஊழியல் (Oozhiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊழ் (Oozh) |