குறள் (Kural) - 332

குறள் (Kural) 332
குறள் #332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

பொருள்
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

Tamil Transliteration
Kooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam
Pokkum Adhuvilin Thatru.

மு.வரதராசனார்

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

சாலமன் பாப்பையா

நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

கலைஞர்

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

பரிமேலழகர்

பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே- ஒருவனுக்குப் பெருஞ்செல்வஞ் சேர்வது ஆடலரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே; போக்கும் அது விளிந்த அற்று- அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்தபின் அக்கூட்டங் கலைவது போன்றதே. எத்துணைச் செல்வமும் கெடுமென்றற்குப் 'பெருஞ்செல்வம்' என்றார். 'போக்கும்' என்னும் எச்சவும்மை வருகையைத் தழுவிற்று. பல்வேறிடங்களிலிருந்து பல்வகை மக்கள் வந்து ஆடல் முடிந்தபின் போய்விடுவது போல, பல்வேறு வழிகளில் திரண்ட பல்வகைச் செல்வமும் நல்வினைப் பயன் நீங்கினவுடன் போய்விடும் என்பது. உவமைப் பொருள் விரிவாம். ஏகாரம் தேற்றம்

மணக்குடவர்

கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.

புலியூர்க் கேசிகன்

பெரும்பொருள் வந்தடைதல், கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)நிலையாமை (Nilaiyaamai)