குறள் (Kural) - 331

குறள் (Kural) 331
குறள் #331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

பொருள்
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

Tamil Transliteration
Nillaadha Vatrai Nilaiyina Endrunarum
Pullari Vaanmai Katai.

மு.வரதராசனார்

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

சாலமன் பாப்பையா

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

கலைஞர்

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

பரிமேலழகர்

நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு. (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை -நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை; கடை - கடைப்பட்ட அறியாமையாம். நாள்தொறும் மாந்தர் எல்லாப் பருவத்திலும் இறக்கக்கண்டும், குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்டவர் ஒருவரும் உலகத்தில் இல்லாமையறிந்தும், இளைஞர் முதியராகவும் செல்வர் வறியவராகவும் மாறுவதைப் பார்த்தும், யாக்கையும் இளமையும் செல்வமும் தமக்கு நிலைக்குமென்று கருதுவது பேதைமை யாதலால் "புல்லறிவாண்மை" என்றும் , இறுதிவரை ஒருபோதும் அறிவுபெறாமையாற் "கடை" என்றுங் கூறினார்.

மணக்குடவர்

நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது. எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.

புலியூர்க் கேசிகன்

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)நிலையாமை (Nilaiyaamai)