குறள் (Kural) - 333

குறள் (Kural) 333
குறள் #333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

பொருள்
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

Tamil Transliteration
Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal.

மு.வரதராசனார்

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

கலைஞர்

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

பரிமேலழகர்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க. ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செயல் அற்கா இயல்பிற்று- செல்வம் யாரிடத்தும் நிலைக்காத தன்மையுடையது; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்- ஆதலால் , அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால் நிலையான பயனுள்ள அறங்களை அப்பொழுதே செய்து கொள்க. அல்குதல் தங்குதல்; அல்லது நிலைபெறுதல் அல்கா என்பது ஓசைநயம் பற்றி வலித்தது. இவ்வதிகாரமும் ஈரறத்திற்கும் பொதுவாதலால், இல்லறத்தான் செல்வம் பெறின் தனக்கு மிஞ்சியதை விருந்தோம்பல், ஒப்புரவொழுகல் முதலிய வழிகளிலும், துறவறத்தான் செல்வம் பெறின் முழுவதையும் கோயில் வழிபாடு, இலவசக்கல்வி முதலிய வழிகளிலும், செலவிட வேண்டுமென்பது கருத்து. செல்வம் பெறுவது அரிதாதலின் 'பெறின்' என்றும், யாக்கையும் செல்வமும் நிலையாதனவாதலின் செல்வத்தை உடனே பயன் படுத்த வேண்டுமென்பார் 'ஆங்கே' யென்றுங் கூறினார்.

மணக்குடவர்

நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க. நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.

புலியூர்க் கேசிகன்

நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)துறவறவியல் (Thuravaraviyal)
அதிகாரம் (Adhigaram)நிலையாமை (Nilaiyaamai)