குறள் (Kural) - 330
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
பொருள்
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
Tamil Transliteration
Uyir Utampin Neekkiyaar Enpa Seyir Utampin
Sellaaththee Vaazhkkai Yavar.
மு.வரதராசனார்
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
சாலமன் பாப்பையா
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
கலைஞர்
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
பரிமேலழகர்
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - அருவருப்பான நோயுடம்புடன் வறுமை கூர்ந்து இழிதொழில் செய்து உயிர்வாழ்பவரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - முற் பிறப்பில் உண்ணும் பொருட்டு உயிர்களை அவை நின்ற உடம்பினின்று நீக்கியவர் என்று சொல்வர் வினைப்பயன் அறிந்தோர். செல்லாமை-வாழ்க்கை நடவா வறுமை . இழிதொழில் இரந்து பிழைத்தல். "அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் துக்கத் தொழுநோ யெழுபவே - யக்கால் அலவனைக் காதலித்துக் கான்முறித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால்." (நாலடி. 123). என்பது செயிருடம்பிற்குக் கரணியம் (காரணம்) கூறிற்று.
மணக்குடவர்
முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | துறவறவியல் (Thuravaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கொல்லாமை (Kollaamai) |