குறள் (Kural) - 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
Tamil Transliteration
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin.
மு.வரதராசனார்
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
கலைஞர்
தன்னைவிட
அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில்
என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
பரிமேலழகர்
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
ஞா.தேவநேயப் பாவாணர்
வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்? அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் 'என்' என்று தொக்கு இங்கு இன்மை குறித்தது. கொல் என்பது அசைநிலை. தூய அறிவாவது இயற்கையாகவும் முழுநிறைவாகவும் ஐயந்திரிபற்றும் இருப்பது. தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின், பிறவிப்பிணிக்கு மருந்தாகும் குறிப்புப்பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். 'தொழாஅர்' இசை நிறையளபெடை. கல்வியின் சிறந்த பயன் கடவுளை வழிபட்டுப் பேரின்ப வீடு பெறுவதென்பதே பண்டையறிஞர் கொள்கை. "ஆண்டவனுக்கு அஞ்சுவதே அறிவின் தொடக்கம்". என்றார் சாலொமோன் ஓதியார் (ஞானியார்.) "எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்." என்பது பழஞ் செய்யுள். "கற்பக் கழிமடம் அஃகும் மடமஃகப் புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும் - கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும் அந்நெறியே இப்பால் உலகத் திசைநிறீஇ யுப்பால் உயர்ந்த வுலகம் புகும்." என்பது நாண்மணிக்கடிகை. (27) கடவுளை வணங்காவிடின் கல்வியாற் பயனில்லை என்பது இக்குறட் கருத்து.
மணக்குடவர்
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
புலியூர்க் கேசிகன்
தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.
திருக்குறளார் வீ. முனிசாமி
எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் (Paayiraviyal) |
அதிகாரம் (Adhigaram) | கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu) |