குறள் (Kural) - 29

குறள் (Kural) 29
குறள் #29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பொருள்
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Tamil Transliteration
Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu.

மு.வரதராசனார்

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

கலைஞர்

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

பரிமேலழகர்

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - நற் குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடியேறி நின்ற முனிவரின் கடுஞ்சினத்தை; கணமேயும் காத்தல் அரிது - சினக்கப்பட்டாரால் நொடி நேரமேனுந் தடுத்தல் முடியாது. குன்று சிறுமலை. இங்கு மலையென்னும் பொதுப் பொருளது எரிக்கும் நெருப்புப் போன்றது வெகுளி. வேகு - வெகுள் - வெகுளி திண்மையும் பெருமையும் வண்மையும் பற்றி நற்குணத்தொகுதியை மலையாக வுருவகித்தார், இக்குறட்கு, நற்குணமலையாகிய முனிவர் நொடிநேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லை யென்று பொருள் கூறுவாருமுளர்.அது உரையன்மை,முந்தின குறளாலும் "சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம்" என்னுங் கம்பர் கூற்றாலும் ( பால. தாடகை. 71) கண்டு தெளிக. உம்மை இழிவு சிறப்பு.

மணக்குடவர்

குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

புலியூர்க் கேசிகன்

நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)நீத்தார் பெருமை (Neeththaar Perumai)